"ஒரு நொடி கவனக்குறைவு" ஆசிரியர் பலி..! விபத்தின் சிசிடிவி காட்சி

0 6200

ருமபுரி அருகே இருசக்கரவாகனத்தில் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் டிப்பர் லாரியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். தலைகவசம் கழண்டு ஓடிய நிலையில் கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தருமபுரிஅடுத்த ஏ. செக்காரபட்டியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான முத்துராஜ் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். தலைக்கவசம் அணிந்திருந்தாலும் அதனை இறுக்கமாக தலையில் வைத்திருக்கும் கழுத்துப்பட்டையை அணியவில்லை என்று கூறப்படுகின்றது.

இண்டூர் கடைவீதி வழியாக செல்லும்போது , முத்துராஜுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று அவரை முந்திச்செல்ல முயன்றது. அப்போது கவனக்குறைவாக அதன் மீது உரசியதால் நிலை தடுமாறி கீழே விழுந்த முத்துராஜ் உடல் மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். இடது பக்கம் அதிக இடம் இருந்த நிலையிலும், முத்துராஜ் விலகிச்செல்லாமல் நடுச்சாலையில் சென்றதுடன், டிப்பர் லாரி முந்திச்செல்வதை அறியாமல் கவனக்குறைவாக வாகனத்தை வலது பக்கம் திருப்ப முயன்று, டிப்பர் லாரி மீது உரசியதால் முத்துராஜ் நிலைதடுமாரி கீழே விழுந்துள்ளார்.

மிகுந்த எடை கொண்ட டிப்பர் லாரியின் பின் சக்கரங்கள் ஏறிய வேகத்தில், கழுத்துப்பட்டை அணியாத தலைகவசம் முத்துராஜ் தலையில் இருந்து கழன்று ஓடியதாகவும், விழுந்த வேகத்தில் டிப்பர் லாரியின் பின்பக்க இரட்டை சக்கரங்கள் அவரது வயிற்று பகுதியில் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தரமான தலைகவசம் அணிவதோடு நிறுத்திவிடாமல், கழுத்துப்பட்டையையும் இறுக்கமாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தும் போலீசார், கூடுமானவரை இருசக்கரவாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தில் இடது பக்கமாக பயணிக்க வேண்டும் என்றும், பின்னால் வரும் வாகனங்களை பார்த்து திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

அதே நேரத்தில் ஒரு நிமிட கவனக்குறைவு விலைமதிப்பில்லா மனித உயிரை காவு வாங்கி விடும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments